புதுடெல்லி, மார்ச் 4: டெல்லி கலவரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று 3-வது நாளாக அமளி ஏற்பட்டது.

மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரையும், மக்களவை இன்று நண்பகல் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லியில் சிஏஏ சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இது குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என கோரியும், எதிர்க்கட்சிகள் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2-ந் தேதி சபை கூடியபோது கோரிக்கைகள் எழுதப்பட்ட அட்டை களை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று 2-வது நாளாக மக்களவையில் நடந்த அமளியின் போது காங்கிரஸ் மற்றும் பிஜேபி உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வரம்புமீறி நடந்துகொண்டால் தொடர் முழுவதும் சபையில் இருந்து நீக்கப்படுவீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்தார்.மேலும் டெல்லி கலவரம் குறித்து ஹோலிப் பண்டிகை முடிந்த பின்னர் 11-ந் தேதி விவாதிக்கப்படும் என அறிவித்தார்.

இதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்ததை தொடர்ந்து 2-வது நாளாக அவை முடக்கப்பட்டது.

இன்று காலை மக்களவை கூடியதும் மீண்டும் அமித்ஷா பதவி விலகக்கோரி கோஷங்கள் எழுப்பினர். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பதிலாக பிஜேபி உறுப்பினர் கீர்த்தி சோலங்கி சபையை நடத்திக் கொண்டிருந்தார். சபாநாயகர் எங்கே என்று கோஷ மிட்டவாறு 30 காங்கிரஸ் எம்பிக்கள் சபையின் மையப்பகுதியில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையடுத்து நண்பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை இன்று காலை கூடியதும், இதேபோல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். அமளிக்கு இடையே டெல்லி கலவரம் குறித்து 11-ந் தேsதி விவாதம் நடத்தப்படும் என சபைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இதை ஏற்க மறுத்து அமளி நீடித்ததை தொடர்ந்து நாளை காலை 11 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.