சென்னை, மார்ச் 4: தமிழ் புத்தாண்டு அன்று நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க இருக்கிறார். இதையொட்டி தனது மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நாளை அவர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போது ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்’ என்று அறிவித்தார்.

இதையடுத்து அவருடைய ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றப்பட்டது. பின்னர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிர்வாகிகளை ரஜினிகாந்த் நியமித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனையும் நடத்தினார்.

அதே நேரத்தில் அவர் ‘2.0.’ ‘காலா’, ‘பேட்ட’, தர்பார்’ என்று வரிசையாக திரைப்படங்களிலும் நடித்தார். தற்போது ‘அண்ணாத்த’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். சினிமா பணிகளுக்கிடையே தனது மக்கள் மன்ற பணியையும் அவர் கவனித்து வந்தார். இந்த நிலையில் “ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவார்” என்று அவரது அண்ணன் சத்தியநாராயணா சமீபத்தில் அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த் தலைமையில் அவரது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தனித்தனியாக தகவல் அனுப்பி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் கட்சியை எப்போது தொடங்குவது? கட்சி பெயர், கொடி போன்றவை முடிவு செய்வது உள்ளிட்டவைகள் குறித்து ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிஏஏ பிரச்சனையில் தான் எடுத்துள்ள நிலைப்பாட்டையும் அப்போது அவர் விவாதிக்கிறார்.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டும் இருப்பதால் ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று கட்சி தொடங்குவார் என்றும், கட்சியின் முதல் மாநாட்டை ஆகஸ்டு மாதம் நடத்துவார் என்றும் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.