கொல்கத்தா, மார்ச் 5: மேற்கு வங்க மாநிலத்தில் திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் ஒருவரின் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம் இடம்பெற்றிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முர்ஷிதாபாத்தில் உள்ள ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் சுனில் கர்மாக்கர். இவர் தனது வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் செய்யக்கோரி விண்ணப்பித்து இருந்தார். பின்னர் அவருக்கு அனுப்பப்பட்ட திருத்தப்பட்ட வாக்காளர் அட்டையை பார்த்த சுனில் கடும் அதிர்ச்சி அடைந்தார். வாக்காளர் அட்டையில் அவரது புகைப்படத்துக்கு பதிலாக நாய் ஒன்றின் படம் அச்சிடப்பட்டிருந்தது. உடனே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு சுனில் புகார் அளித்தார்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது இத்தகைய தவறு நடந்திருக்கலாம் என்றும் சரியான புகைப்படத்துடன் இறுதி வாக்காளர் அட்டை சுனிலுக்கு விரைவில் வழங்கப்படும் என்றும் அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.