‘மகளிர் சாதனை படைத்திடுக’

TOP-4

சென்னை, மார்ச் 7:

பெண்கள் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி சாதனை படைத்து உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.

முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி விவரம் வருமாறு:-

பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8-ம் நாள் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் அனைத்து மகளிருக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பெண்களின் வாழ்வு மேன்மையுறவும், பெண்களின் நல்வாழ்விற்காகவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம், கிராமப்புர பெண்களின் பொருளாதாரம் மேம்பட விலையில்லா ஆடுகள், மாடுகள் வழங்கும் திட்டம், படித்த பெண்களை ஊக்குவிக்க திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், இந்தியாவிற்கே முன்னோடியாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைந்திட 13 அம்ச திட்டம், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒன்பது மாத காலம் மகப்பேறு விடுப்பு, உழைக்கும் மகளிர் பயன்பெறும் வகையில் ‘அம்மா இருசக்கர வாகனத் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பான வசிப்பிடத்தில் தங்கிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள், பெண்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்திடவும், அவர்களை சுயசார்புடையவர்களாக உயர்த்தும் பொருட்டும் சமூக நலத் துறையின் கீழ், 123 மகளிர் தொழில் கூட்டுறவு சங்கங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை முழுமையாக உறுதி செய்வதற்கு சென்னை பெருநகரில் பல்வேறு இடங்களில் நிர்பயா நிதியின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், மகளிர் பாதுகாப்பை உறுதிசெய்திட ‘காவலன்’ கைப்பேசி செயலி, தமிழ்நாட்டில் பெண் சிசு கொலையை தடுத்தல், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்தல் மற்றும் பாலின விகிதத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பெண்கள் உரிமைகள், பாலியல் வன்கொடுமை மற்றும் பணியிடங்களில் உருவாகும் அசாதாரண நிலையை குறித்து புகார் தெரிவிக்க பெண்களுக்கென பிரத்யேகமாக இணையத்தளத்தில் வடிவமைக்கப்பட்ட ‘புகார் பெட்டி’ ஏற்படுத்தப்பட்டு சமூக நலத்துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் செயல்பட கூடிய மகளிர் உதவி மையத்தை தொடர்பு கொள்ள 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ‘ஒருங்கிணைந்த சேவை மையம்’ என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஆதரவையும், ஒருங்கிணைந்த சேவையாக தற்காலிக தங்கும் வசதி, மருத்துவ உதவி, சட்ட உதவி, மனநல ஆலோசனை போன்ற சேவைகளும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

பெண்கள் வாழ்வில் எதிர்வரும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, தடைக் கற்கனை படிக் கற்களாக மாற்றி, சாதனை படைக்கும் பெண்களாக அனைத்து மகளிரும் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தி, இந்த இனிய நாளில், அனைத்து மகளிருக்கும் எனது இதயப்பூர்வமான மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.