சென்னை, மார்ச் 9: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாதபடி தடுக்க தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டந்தோறும் ஐஏஎஸ் அதிகாரிகள் குழுக்களை அமைத்து கண்காணிக்கவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,827 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,129 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் 41 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாகமத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நோய் தாக்கத்துடன் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் தனது உறவினர்களை சந்தித்ததால் அவர்கள் 27 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களிடம் அச்சத்தை போக்கும் வண்ணம் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்துள்ளார். பள்ளி, கல்லூரி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது.

அரசு துறைகளில் பயோமெட்ரிக் பதிவேடு முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனை மட்டுமில்லாது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தனிவார்டு, தனி மருத்துவ குழு உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. காய்ச்சல், இருமல் தொடர்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்கள் விபரங்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கொரோனா விவகாரம் தொடர்பாக பணிகள் மேற்கொள்ள தேவையான நிதி ஓதுக்கவதும் என்றும், மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.