சென்னை, மார்ச் 9: ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கட்சி அறிவித்துள்ளது. மீதி உள்ள இடம் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு ஆறு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கி விட்டது. வருகிற 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மூன்று பேர் வெற்றி பெற முடியும். அந்த 3 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 26.3.2020 அன்று நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான மூன்று இடங்களில், இரண்டு இடங்களுக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.
1. கே.பி.முனுசாமி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் அமைச்சர்.

2. டாக்டர் மு.தம்பிதுரை, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர்.
மற்றுமுள்ள ஒரு இடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அந்த இடத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.