திருவாரூர், மார்ச் 9: காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் விவசாயிகள் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ‘காவிரி காப்பாளர்’ பட்டம் வழங்கி ஏர்கலப்பை பரிசாக வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் காவிரி பாசன பகுதிக்கு ரூ.7,888 கோடி மதிப்புக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து வரலாற்று சாதனை படைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் நன்றி மற்றும் பாராட்டு விழா திருவாரூரில் நடைபெற்றது.

இந்தவிழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இன்றைக்கு ஒரு எழுச்சியான, பொன்னான நாள். இந்த நாளில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சுமார் 9 ஆண்டு காலம் அமைச்சராக இருந்திருக்கிறேன். ஆனால், ஒரு சட்ட முன்வடிவைக் கூட நான் கொண்டு வரவில்லை. ஆனால், இறைவனின் அருளால், ஜெயலலிதா அருளாசியோடு இப்படி ஒரு சட்ட முன்வடிவை, விவசாயப் பெருங்குடி மக்களைப் பாதுகாக்கக் கூடிய காவிரி பாசன வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்ற சட்ட முன்வடிவை முதன்முதலாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பெருமையை நான் பெற்றிருக்கின்றேன்.

முதலமைச்சர் பதவி என்பது வரும், போகும், ஆனால், உணர்வு என்பது எப்பொழுதும் உள்ளத்திலே இருக்கும்.
இன்று பல திட்டங்களை அறிவிக்க விரும்புகிறேன். டெல்டா பகுதியில் விவசாயம் செழிக்க வேண்டுமென்றால், நீர்ப்பாசன கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். இதற்காக ஜி.ஏ. கேனல் மேம்பாட்டுத்திட்டம் 2,298 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்கான நிதியை ஏஐஐபி வங்கி மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது தவிர, காவேரி உபவடிநிலம் பாசன அமைப்புகளை மேம்படுத்த 5,590 கோடி ரூபாய் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன நிதி உதவி பெற்று இத்திட்டத்திற்கான தொடக்க விழாவும் விரைவில் நடைபெற உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் சுமார் 7,000 கோடி ரூபாய்க்கு மேல் இப்பகுதி நீர்பாசன கட்டமைப்பை மேம்படுத்த செலவிடப்பட்டு விவசாயிகளின் வாழ்வில் மலர்ச்சியை இந்த அரசு ஏற்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு அனைத்து விவசாய சங்கத் தலைவர்களும் ஒருங்கே இணைந்து காவேரி காப்பாளர் என்ற ஒரு அற்புதமான பட்டத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். காவேரி காப்பாளர் என்றால் இந்தக் காவேரியைக் காக்க வேண்டும் என்ற பொருளாக நான் கருதுகின்றேன். இதோடு என்னை இங்கு விட்டுவிடவில்லை, இனி, எப்பொழுது பிரச்சினைகள் வந்தாலும் நீங்கள் தான் தீர்க்க வேண்டுமென்ற மிகப்பெரிய பொறுப்பை என்னிடத்தில் கொடுத்திருக்கிறார்கள். நிச்சயமாக, கண்ணை இமை காப்பது போல் இந்த டெல்டா பாசன விவசாயிகளை நானும், என்னுடைய அரசும் காப்போம், ஐயப்பட வேண்டியதில்லை.

பெரியவர் ரங்கநாதன் அனுபவத்திலே சிறந்தவர், நடைபெற்ற சம்பவங்களை அழகாகச் சொன்னார். அவரும் அவரோடு இணைந்து விவசாய சங்கங்களின் நிர்வாகிகளும் எனக்கு இந்தப் பட்டத்தைத் கொடுத்திருக்கின்றார்கள். அதற்கு நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த விவசாயிகளும் கடமைப்பட்டிருக்கின்றோம் என்று தெரிவித்து, என்றைக்கும் என் மனதில் குடியிருப்பவர்கள் வேளாண் பெருங்குடி மக்கள், விவசாயத் தொழிலாளர்கள், இருவரையும் இரண்டு கண்கள் போல நான் பார்க்கின்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் காவிரி டெல்டா விவசாய சங்க பிரதிநிதிகள் சார்பில் தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் சி.ரங்கநாதன் மற்றும் சங்க பிரதிநிதிகள் ‘காவேரி காப்பாளர்’ என்ற பட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி ஏர்கலப்பையினை பரிசாக வழங்கினார்கள். விழாவில் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், துரைக்கண்ணு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் காவிரி பாசன விவசாயிகள் உரிமை பாதுகாப்பு சங்கத் தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வரவேற்று பேசினார். காவிரி சி.ரங்கநாதன் தலைமையுரையாற்றினார்.
காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் பாராட்டி பேசினர்.