சென்னை, மார்ச் 9: ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவக்க உள்ள நிலையில் தலித் தலைவர்களில் ஒருவரான இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் இன்று சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார்.
அண்மையில் முஸ்லீம் தலைவர்கள் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்கள். நாட்டில் அமைதி ஏற்பட தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. அரசியல் கட்சியை துவக்குவது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் நெருங்கி பழகியவர் செ.கு.தமிழரசன். அவர்களின் அரசியல் வியூகங்களையும் அறிந்தவர். இன்று அவர் காலை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு சென்று பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
தனது அரசியல் அனுபவங்களை ரஜினியிடம் எடுத்துக் கூறியதாக தெரிகிறது. தற்போதுள்ள அரசியல் நிலைமையையும் அதனை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும் அவர் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

குடியுரிமைச் சட்டம் உட்பட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் செ.கு.தமிழரசன் விரிவாக பேசியதாக தெரிகிறது. விரைவில் ரஜினி அரசியல் கட்சி துவக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியதாக தெரிகிறது.