புதுடெல்லி, மார்ச் 9: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தொடங்கி அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்திவந்த கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு தற்போது இந்தியாவிலும் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுவந்தோர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ளவர்களில் கொரோனா நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை தனிவார்டில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த சூழலில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மேலும் பரவுவதை தடுக்க, மக்கள் கூடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும், இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காகவும் ஒழிப்பதற்காகவும் உலக நாடுகள் கடைபிடித்து வரும் நடைமுறைகளை கண்டறிந்து அவற்றை மாநில அளவில் செயல்படுத்தவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், வரும் 29-ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காகவும், போட்டியை கண்டுகளிப்பதற்காகவும் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்களும், ஏராளமான ரசிகர்களும் ஓரிடத்தில் கூடுவதன் காரணமாக, இந்த ஐபிஎல் போட்டி தொடர் ரத்துசெய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கங்குலி மறுப்பு: அதேசமயம், திட்டமிட்டப்படி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.