சென்னை, மார்ச் 9:

மதுரவாயலில் காலியிடத்தில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண்சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர். உடலில் காயங்களுடன் இருப்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
மதுரவாயல் பாலன் தெருவில் தனியாருக்கு சொந்தமான 2 கிரைவுண்ட் காலி மனை உள்ளது. இங்கு, இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் சடலம் நிர்வாணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரவாயல் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

படுகாயங்களுடன் உள்ளதால், கல்லால் அடித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவரும் போலீசார், கொல்லப்பட்ட நபர் யார்? என்பது குறித்த விவரங்களையும் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரவாயலில் மக்கள் நடமாடும் காலியிடத்தில் நிர்வாணமாக வாலிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.