காஞ்சிபுரம், மார்ச் 9: ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரம் வந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவரது குடும்பத்தினர் 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஓமன் நாட்டில் வேலை பார்த்த காஞ்சிபுரத்தைச்சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க என்ஜினியர் ஒருவர் கடந்த 27ம்தேதி சொந்த ஊர் வந்தார்.அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த 4ம்தேதி சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்துஅவரது ரத்த மாதிரி கிண்டி கிங் ஆராய்ச்சி நிலையத்தில் பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு சிறப்பு பாதுகாப்பு உபகரணங்களுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது ரத்த மாதிரி மீண்டும் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைரஸ் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில்அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணையில், ஓமன் நாட்டில் பணியாற்றி வரும் அவர், காஞ்சிபுரத்தில் சொந்தமாக வீடு கட்டி வருகிறாராம். அந்த வீட்டை பார்ப்பதற்காக கடந்த 27ம் தேதி காஞ்சிபுரம் வந்துள்ளார். பின்னர் அவர் தனது உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்து வந்துள்ளார்.இந்த நிலையில் தான் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு வைரஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் தொற்று என்பதால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு பொது மருத்துவமனை சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் நகராட்சி துறை அலுவலர்கள்,ஊழியர்கள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.