புதுடெல்லி, மார்ச் 10: மத்தியப் பிரதேச மாநில அரசியலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இதன் தொடர்ச்சியாக காங்கிரசில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை பெற்ற போதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 230 பேர் கொண்ட சட்டமன்றத்தில் 114 இடங்களில் மட்டுமே வென்றது. என்றாலும் 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜவாதி எம்எல்ஏ, 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதரவுடன் கமல்நாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிஜேபி 107 உறுப்பினர்களுடன் பலமிக்க எதிர்க்கட்சியாக உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் மாயமானார்கள். மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, அவர்களை பிஜேபியினர் கடத்தி, பெங்களூரில் வைத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை பிஜேபி மறுத்துவிட்டது. மாயமானவர்களில் 8 பேர் திரும்பி வந்தனர். அவர்கள், கமல்நாத் அரசுக்கு தங்கள் ஆதரவு தொடரும் என்று தெரிவித்தனர்.

முதல்வர் கமல்நாத்துக்கும், கட்சியின் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே தொடக்கம் முதலே இருந்து வந்த பனிப்போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. நிலைமையை சீர்படுத்துவதற்காக முதலமைச்சர் கமல்நாத் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினார். இதில் 10 அமைச்சர்களே கலந்து கொண்டார்கள். அனைவரும் ராஜினாமா கடிதத்தை கமல்நாத்திடம் வழங்கினர். கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சீரமைக்க அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என கமல்நாத் கூறினார்.

இந்த சூழ்நிலையில் சிந்தியாவுடன் சமரச பேச்சு நடத்த காங்கிரஸ் தரப்பில் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இன்று காலை அவர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது பிஜேபி தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவும் உடன் இருந்தார். பின்னர் மூவரும் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இதையடுத்து ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசில் இருந்து விலகினார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பினார். அவருடன் 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனால் 230 பேர் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரசின் பலம் 114-ல் இருந்து 95 ஆக குறைந்தது . இதனால் பெரும்பான்மையை காங்கிரஸ் கட்சியை இழந்தது.
இதனிடையே பிஜேபி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை போபாலில் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற கட்சித் தலைவராக சிவ்ராஜ் சிங் சவுகான் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதலமைச்சர் கமல்நாத் மற்றும் ம.பி.மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் டெல்லியில் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இதில் மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.