சென்னை, மார்ச் 10: தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் பொறியாளருடன் பழகியவர்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

சீனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று மட்டும் 17 பேர் உயிரிழந்தனர். இதனால், உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரசால் 4,011 பேர் உயிரிழந்துள்ளனர். 1,10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா தொற்று இந்தியாவிலும் நுழைந்து உள்ளது.
இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும், மக்களிடம் தீவிர விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஓமனில் இருந்து தாயகம் திரும்பிய, காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், காஞ்சிபுரம் பொறியாளருடன் பழகியவர்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் 8 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், அவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியாகி உள்ளது. இதில், சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காஞ்சிபுரம் பொறியாளருடன் நெருங்கி பழகிய 7 பேரும் அடங்குவர். எனவே, தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, என கூறியுள்ளார்.

பொறியாளர் குணமடைந்து வருகிறார் என்றும் அவர் கூறினார். அமெரிக்காவில் இருந்து வந்த 15 வயது சிறுவன் வீட்டுக்கு அனுப்பப்படுகிறான் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் எத்தனை வார்டுகளை கொடுக்க முடியும் என்று கருத்துகளை கேட்டிருக்கிறோம். அதன் பேரில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.