சென்னை, மார்ச் 10: அரசியல் தொடர்பாக யாருடைய ஆலோசனையையும் பெற வேண்டிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லை என்று நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் எஸ். திருநாவுக்கரசர் கூறினார்.
ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் திருநாவுக்கரசர் தனது குடும்பத்தினருடன் இன்று சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:-
ரஜினிகாந்த் என்னுடைய குடும்ப நண்பர். என்னுடைய மகளின் திருமணத்துக்கு வந்து வாழ்த்து தெரிவித்தார். தற்போது எனது பேரனுக்கு பிறந்தநாள் என்பதால் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக சென்றோம் என்றார்.

அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை கூற ரஜினி உங்களை அழைத்தாரா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அவர் யாரிடமும் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை. அவர் சினிமாவிலும், பொது வாழ்விலும் பெற்ற அனுபவங்கள் அடிப்படையில் செயல்படுகிறார். நான் அவருக்கு எந்த ஆலோசனையையும் கூறவில்லை என்று திருநாவுக்கரசர் கூறினார்.

தனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன என கேட்ட போது, நீங்கள் ஏமாற்றம் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் காரை நிறுத்தி உங்களிடம் பேசுகிறேன். ஏனென்றால் நான் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் உங்களை சந்தித்து பேசுகிறேன் என்றார்.
ரஜினியை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்து பேசினேன். பொதுவான அரசியல் நிலைமைகள் குறித்து அவரிடம் நான் பேசினேன். அவர் ஆலோசனை எதுவும் கேட்கவும் இல்லை, நானும் சொல்லவில்லை. பொதுவாக நாட்டு நடப்பு பற்றி தான் பேசினோம் என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருப்பது பற்றி கேட்டதற்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். நான் மிகவும் நேசித்த தலைவர் ஜி.கே.மூப்பனார். அவருடைய மகனுடனும் நட்பாக இருந்து வந்திருக்கிறேன். அவர் தற்போது ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட இருப்பதற்கு எனது வாழ்த்துக்கள். அதே போல ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திருச்சி சிவா உட்பட ஆறு பேருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா தேர்தலில் வாய்ப்பு அளிக்காதது மனக் கசப்பை ஏற்படுத்தி இருக்கிறதா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் இவ்வாறு அவர் கூறினார்.