சென்னை, மார்ச் 10: கோழி, மீன், இறைச்சி கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை. எனவே மக்கள் அச்சமின்றி அவற்றை வாங்கி சாப்பிடலாம் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
கேரளாவில் கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் பீதி காரணமாக தமிழ்நாட்டில் பிராயிலர் பண்ணை கறிக்கோழி விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கறிக் கோழிகளில் 25% கேரளாவில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் பறவைக் காய்ச்சல் காரணமாக பண்ணை கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ. 25 குறைந்துள்ளது.

இதற்கு முன்பு பண்ணை கொள்முதல் விலை ஒரு கிலோ ரூ.80 ஆக இருந்தது. கேரளாவில் பறவை காய்ச்சல் காரணமாக அங்குள்ள பண்ணைகளில் ஏராளமான கோழிகள் அழிக்கப்பட்டுவிட்டன.
அதே நேரம் கறிக்கோழி மூலம் கொரோனா பரவும் என்ற வதந்தி பெரும் நஷ்டத்தை விளைவித்துவிட்டதாக ஈரோடு கோழிப் பண்ணையாளர்கள், உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். இதனால் நாமக்கல், கோவை, திருப்பூரில் உள்ள கோழிப்பண்ணையாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில்: கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு வதந்திகள் உலா வருகிறது. கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி மூலம் கொரோனா பரவுவதாக பொய் செய்தி பரப்பபடுகிறது. இது முற்றிலும் தவறான தகவல்கள் ஆகும், கோழி இறைச்சி, மீன், முட்டை உள்ளிட்ட இறைச்சிகள் மூலம் கொரோனா பரவ வாய்பில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் எந்த அச்சமின்றி இறைச்சி, கடல் உணவுகளை உண்ணலாம். என்றார்.