புதுடெல்லி, மார்ச் 10:  ஐ.பி.எல்., பாணியில் ஆஸ்திரேலிய மண்ணில் பெண்களுக்கான ‘பிக் பாஷ்’ தொடர் நடத்தப்படுகிறது. இதேபோல இந்திய மண்ணிலும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த உலகக் கோப்பை தொடருக்காக ஒருமாதம் முன்னதாக ஆஸ்திரேலியா சென்றது இந்திய பெண்கள் அணி. முத்தரப்பு தொடரில் பங்கேற்றது. அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டனர். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தான் காரணம்.

இத்தொடரில் திறமையான வீராங்கனைகளை கண்டு கொண்டோம். இன்னும் இதுபோல பல வீராங்கனைகளின் திறமைகள் வெளியில் தெரியாமல் உள்ளன. இதைக் கண்டறிய அடுத்த ஆண்டு பெண்களுக்கான ஐபிஎல் தொடரை முழு அளவில் நடத்த பிசிசிஐ-யும், அதன் தலைவர் கங்குலியும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

எட்டு அணிகள் இல்லை என்றாலும் பெண்கள் தொடர் பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். உடனடியாக இல்லை என்றாலும், அடுத்த ஆண்டுகளில் இந்திய பெண்கள் அணியினர், சர்வதேச தொடர்களில் கோப்பையை வெல்ல துவங்கி விடுவர்.

ஐ.பி.எல். தொடர் எப்படி இந்திய ஆண்கள் அணிக்கு பல்வேறு வீரர்களை தருகிறதோ, அதுபோல பெண்கள் தொடரும் கைகொடுக்கும். இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.