சென்னை, மார்ச் 11: பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டதையடுத்து, தொழிலதிபர் ஒருவரை காரில் கடத்தி சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
நேற்றிரவு 11 மணியளவில் அண்ணாசாலை புஹாரி ஓட்டல் அருகே காரில் வந்திறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், நபர் ஒருவரை சுற்றிவளைத்து பேசிக்கொண்டிருந்தபோதே, அவரை காரில் கடத்திச்சென்றது.

இதை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பேரில், திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீதாராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு நடத்தி, சிசிடிவி கேமரா பதிவின்மூலம் கார் எண்ணை கண்டறிந்து, அதனை கண்காணித்ததில், ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே கார் நின்றுக்கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார் காரில் இருந்த 5 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து, தொழிலதிபரை மீட்டு விசாரணை நடத்தினர். மதுரையை சேர்ந்த ராஜா உசேன் (வயது 48) என்பவர், 1995-ம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் விலாத்திகுளத்தில் நடந்த கொலை வழக்கு ஆகியவற்றில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
இவரிடம் ராயப்பேட்டையை சேர்ந்த பைசுதீன் (வயது 48) என்ற தொழிலதிபர், ரூ.10 லட்சம் பணத்தை கடந்த 6 மாதங்கள் முன்பு கடனாக வாங்கியுள்ளார். இதனிடையே, சிந்தாதிரிப்பேட்டை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த உசேன், அண்ணாசாலை புஹாரி ஹோட்டல் அருகே தனது காரில் வந்து பைசுதீனிடம் பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார்.

அப்போது, இருவரிடையே எழுந்த தகராறின்போதுதான் பைசுதீனை, உசேன் மற்றும் அவரது கூட்டாளிகள் காரில் கடத்தி சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மதுரையை சேர்ந்த ராஜா உசேன் (வயது 48). அவரது மகன் முகமது சபீயுல்லா (வயது 27), திருச்சியை சேர்ந்த ரஹமதுல்லா (வயது 25), ஆசிப்கான் (வயது 22), தவ்பிக் (வயது 22) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.