சென்னை, மார்ச் 11:  ஏழு பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க கவர்னர் காலதாமதம் செய்வதால், சிறையில் இருந்து வரும் தன்னை சட்டவிரோத காவலில் இருப்பதாக கருதி விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசு அமைச்சரவை கூடி, 2018- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது தமிழக கவர்னர், இதுவரை எந்த முடிவும் எடுக்காததால், தன்னை விடுதலை செய்யமால் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்துள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை, நீதிபதிகள் ஆர். சுப்பைய்யா, ஆர் பொங்கியப்பன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஆர். ராஜகோபால், உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படியே, நளினி ஆயுள் தண்டனையில் சிறையில் உள்ளார். அதை சட்டவிரோத காவல் எனக் கூறமுடியாது. ஆகவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஏ.நடராஜன் தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது, ஆளுனர் எந்த ஒரு முடிவும் எடுக்காதவரை அவரது அதிகாரத்தை எவரும் கேள்வி கேட்க முடியாது. தமிழக அரசு ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டுமென பரிந்துரை அனுப்பியதோடு மாநில அரசின் கடமை முடிந்து விட்டது. நளினி சட்டவிரோத காவலில் சிறையில் இல்லை. எனவே, அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன், தமிழக அரசை ஆளுனர் நடத்துகிறாரா? இல்லை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறதா என்ற சந்தேகம் எழுத்துள்ளது? மாநில அமைச்சரவை தீர்மானத்திற்கு ஆளுனர் கட்டுப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
முத்தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். அந்த வழக்கில் நீதிபதிகள் ஆர். சுப்பையா, ஆர். பொங்கியப்பன் ஆகியோர் கொண்ட அமர்வானது மார்ச் 11- ம் தேதி தீர்ப்பு கூறியது. அதில், நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளனர்.