புதுடெல்லி, மார்ச் 11: மக்களவையில் இன்று ஏழு காங்கிரஸ் உறுப்பினர்களை இந்த தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தததை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று வாபஸ் பெற்றார்.
கடந்த வாரம் மக்களவைக் கூட்டம் நடைபெற்ற போது டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது கொரோனா வைரசுடன் சோனியா குடும்பத்தை தொடர்பு படுத்தி பிஜேபி ஆதரவு உறுப்பினர் பேசியதால் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் மேஜையில் இருந்த ஆவணத்தை பறித்தனர். இதையடுத்து ஏழு காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஹோலி விடுமுறைக்கு பின் இன்று காலை மக்களவை கூடிய போது இடை நீக்கம் எப்போது வாபஸ் பெறப்படும் என்று கேட்டு காங்கிரசார் அமளியில் ஈடுபட்டனர்.
அவையின் மைய பகுதிக்கு சென்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவை இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

12.30 மணிக்கு அவை மீண்டும் கூடிய போது ஏழு பேரின் இடை நீக்கத்தை சபாநாயகர் ஓம் பிர்லா வாபஸ் பெற்றதாக சபையில் அறிவிக்கப்பட்டது.