சென்னை, மார்ச் 11: அரசியல் கட்சியை துவக்குவது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாளை இது குறித்து இறுதி முடிவெடுத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று ரஜினி அடிக்கடி கூறி வந்தார். ஆனால், இதுவரை அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று கூறப்பட்டது.

இதுபற்றிய ஒரு திட்டவட்டமான தகவலை 2017 டிசம்பர் 31-ம் தேதி ரஜினி வெளியிட்டார். தனிக்கட்சி தொடங்கி அரசியல் வெற்றிடத்தை நிரப்புவேன் என்றும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.
அதே போல எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவிலும் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவேன் என்றும் ரஜினி தெரிவித்திருந்தார்.
அண்மையில் முஸ்லீம் தலைவர்கள் அவரை சந்தித்து பேசிய போது நாட்டில் அமைதி ஏற்படுத்த தன் தகுதிக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வேன் என்று உறுதியளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதோ வருகிறார், இதோ வருகிறார் என்று புலி வருவது போன்ற கதையாகவே இதுவரை இருந்து வந்தது. ஆனால் தற்போது அவர் அரசியல் கட்சியை ஆரம்பிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
கடந்த 5-ம் தேதி நடைபெற்ற மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஒரு விஷயம் மட்டுமே தமக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று கூட்டத்திற்கு பின் ரஜினி செய்தியாளர்களிடம் கூறினார். தனது கட்சி வெற்றி பெற்றால் தலைமை பொறுப்பை ஏற்க அவர் விரும்பவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தொடர்ந்து ரஜினியிடம் வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து ரஜினி ஆலோசனை நடத்தினார்.
தலித் தலைவர் செ.கு.தமிழரசன் ரஜினியை சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினார். தென்சென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் ஒரு மணி நேரத்துக்கு மேல் சந்தித்து பேசினார். நேற்றைய தினம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.
பல்வேறு கட்டங்களில் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் அரசியல் கட்சியை ஆரம்பிப்பது என்ற முடிவுக்கு ரஜினி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விவாதிப்பதற்காக மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நாளைய தினத்தில் கூட்டியிருக்கிறார். அவர்களிடம் தனது முடிவை தெரிவிக்கிறார்.
அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்து அரசியல் கட்சி தான¢ தொடங்க இருப்பது பற்றி வெளிப்படையான அறிவிப்பை வெளியிடுகிறார். பத்திரிகையாளர்கள் அனைவரையும் அவர் அழைத்து நேரில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறார்.
நாளைய தினம் சுப முகூர்த்த நாள், மேலும் ரஜினியின் குருவான ராகவேந்திரருக்கு உகந்த வியாழக்கிழமை என்பதால் அவர் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தாலும், பிஜேபியுடன் கூட்டணி இருக்காது என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.