மத்தியப்பிரதேசத்தில் ‘ரிசார்ட்’ அரசியல்

இந்தியா

போபால், மார்ச் 11: மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து, காங்கிரஸின் 92 எம்.எல்.ஏக்களும் ராஜஸ்தான் அழைத்து செல்லப்பட்டு ஜெய்ப்பூர் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இதேபோல், ராஜினாமா செய்த 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பிஜேபி எம்.எல்.ஏ.க்கள் 107 பேர் குருகிராமத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத்திற்கு எதிராக அதிருப்தி தலைவர் ஜோதி ராதித்ய சிந்தியா நேற்று திடீர் புரட்சியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்த பின்னர், அவர் காங்கிரஸில் இருந்து விலகினார். அவருடன், 21 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இவர்களது ராஜினாமா கடிதங்களை பிஜேபி மூத்த தலைவர்கள், கவர்னர் என்.பி. பிரஜாபதியிடம் வழங்கினார்கள்.

ராஜினாமாவை ஏற்பது குறித்து ஆலோசித்து கவர்னர் முடிவெடுப்பார் என கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது. 21 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டால் சட்டமன்றத்தில் காங்கிரஸின் பலம் 114-ல் இருந்து 93 ஆக குறைந்துவிடும். சட்டமன்ற மொத்த உறுப்பினர்கள் பலம் 230-லிருந்து 209 ஆக குறைந்துவிடும். அப்போது, பெரும்பான்மைக்கு 105 உறுப்பினர்கள் போதும். பிஜேபி-க்கு தற்போது 107 உறுப்பினர்கள் உள்ளனர். இதனிடையே, சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் இன்று பிஜேபி தலைவர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்து பேசியுள்ளனர். இவர்களும் பிஜேபியை ஆதரித்தால், அதன் பலம் 110 ஆக உயர்ந்துவிடும்.

எனவே, கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தால் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பிஜேபி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஆட்சியை தக்கவைப்பதற்கான முயற்சியில் காங்கிரசும் ஈடுபட்டுள்ளது. டெல்லியிலிருந்து முகுல்வாஸ்னிக், ஹரீஸ் ரவாத், தீபக் பாபாரியா ஆகியோர் போபால் விரைந்துள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக இவர்கள் கூறிவருகிறார்கள்.
இதனிடையே எம்எல்ஏக்களை அந்தந்த கட்சிகளில் தக்கவைப்பதற்காக ரிசார்ட் அரசியல் துவங்கி உள்ளது. பெங்களூர், ஜெய்ப்பூர் நட்சத்திர ஓட்டல்களில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.