ஐதராபாத், மார்ச் 11: கொரோனா வைரஸ் காரணமாக ஐதராபாத் அருகே கல்புர்கி என்ற இடத்தில் 76 வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த வைரசுக்கு முதலில் பலியானவர் இவர் ஆவார். அண்மையில் சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய இவர், கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதால், மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் புதியதாக இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, ஜெர்மனியில் இருந்து புனே வந்த தம்பதியருக்கு புதிதாக கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இத்தாலியில் இருந்து கேரளாவிற்கு வந்த 45 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால், தனிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வெளிநாட்டு பயணிகள் கப்பல்களுக்கு தடை:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு பயணிகள் கப்பல்கள் வரும் 31-ம் தேதி வரை சென்னை வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனா, இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் படிப்படியாகப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 61 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் மார்ச் 31-ம் தேதி வரை வெளிநாட்டுப் பயணிகள் கப்பல்களுக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு பயணிகள் கப்பல்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை துறைமுகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.