புதுடெல்லி, மார்ச் 11:

காங்கிரசில் இளைஞர்களுக்கும், வயதானவர்களுக்கும் நடைபெறும் மோதலில் இளைஞர்களை சோனியா ஓரம் கட்டுகிறார். இதன் விளைவாகவே ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்திருப்பதாக தெரியவந் துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் 49 வயதான ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்தார். முன்னாள் எம்பியான இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமான நண்பர். காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ததில் இருந்து கட்சியில் இவரது முக்கியத்துவம் குறைந்தது. தற்காலிக தலைவர் பதவியை சோனியா ஏற்றதில் இருந்து திக் விஜய் சிங் போன்ற முதுபெரும் தலைவர்களுக்கே முக்கியத் துவம் கொடுக்கப்பட்டது.

2018 டிசம்பரில் கமல்நாத் முதல்வர் பதவி ஏற்ற போதே அந்த பதவியை ஜோதிராதித்ய சிந்தியா விரும்பினார். தனக்கு 23 எம்எல்ஏக்கள் ஆதரவை இருப்பதை கட்சி தலைமைக்கு தெரிவித்தார்.

இருப்பினும் சோனியா தலையிட்டதன் பேரில் கமல்நாத்துக்கே முதல்வர் பதவி கிடைத்தது. அவர் வகித்து வந்த மாநில கட்சி தலைவர் பதவியும் சிந்தியாவுக்கு வழங்கப்படவில்லை. 26-ந் தேதி நடைபெற உள்ள ராஜ்யசபை உறுப்பினர் தேர்தலிலும் சிந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று மேலிடம் சூசகமாக தெரிவித்துள்ளது. பிரியங்காவை எம்பியாக்க முடிவெடுத்து இருப்பதே இதற்கு காரணம்.

மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத்தும், ராஜஸ்தானில் அசோக்கெலாட்டும் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்தே இளைஞர்களை ஓரம்கட்டும் பணி தொடங்கியிருக்கிறது. தனது அதிருப்தியின் வெளிப்பாடாகவே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப் பட்டதை சிந்தியா ஆதரித்தார். எம்பி தேர்தலில் தோல்வி யடைந்த போதிலும் சொந்த தொகுதியில் மக்களை சந்தித்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கமல் நாத்துக்கு கோரிக்கை விடுத்தார். காங்கிரசில் ஏற்படும் இந்த மோதலை பிஜேபி மூத்த தலைவர்கள் கடந்த 3 மாதங்களாகவே கண்காணித்து வந்தனர். ஒரு மாதமாக சிந்தியாவுடன் பிஜேபி நல்ல தொடர்புவைத்திருந்தது.

கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் சோனியாவை சந்திக்க ஜோதிராத்திய சிந்தியா நேரம் கேட்டார். மாலை வரை காத்திருந்த அவருக்கு சோனியா உங்களை சந்திக்கவிரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டது.