கொரோனாவால் பாதித்த என்ஜினியர் குணமடைந்தார்

தமிழ்நாடு

காஞ்சிபுரம், மார்ச் 11:

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரம் என்ஜினியர் குணமடைந்தார். தனிமைப்படுத்தப்பட்ட அவரது உறவினர்கள் 27பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
மேலும் காஞ்சிபுரத்தில் என்ஜினியருக்கு முதன் முதலில் சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ குழு கண்காணிப்பில் உள்ளனர்.

ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரம் வந்த 45 வயது என்ஜினியருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது குடும்பத்தினர் 27பேர் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரம் என்ஜினியர் உடல் நலம் தேறி குணமடைந்துள்ளார். மேலும் அவரது உறவினர்கள் 27பேருக்கும் எடுக்கப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் அவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் என்ஜினியருக்கு காஞ்சிபுரத்தில் காய்ச்சல் கண்டவுடன் சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்கள் மருத்துவ குழு கண்காணிப்பில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் காஞ்சிபுரம் மேட்டு தெருவில் வசிக்கும் மக்கள் நிம்மதி அடைந்தனர்.