சென்னை, மார்ச் 11:

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை பரிட்சாத்த முறையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கியுள்ள நிலையில் இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எப்போது விரிவுபடுத்தப்படும் எனவும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டிருப்பதால் ஸ்மார்ட் கார்டுகளின் மூலமாக பொதுமக்கள் தாங்களே பெயர் திருத்தம் செய்து கொள்ளும் வசதியும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் திமுக உறுப்பினர் கருணாநிதி கூறியது போல தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சோதனை முறையில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.