சென்னை, மார்ச் 12: அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களை முதல் முறையாக சந்தித்த ரஜினிகாந்த் அதுபற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடாதது அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்துங்கள், அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

முதல்வர் பதவியை தான் ஏற்க மாட்டேன் என்றும், இளைஞர் ஒருவரை அப்பதவியில் அமர்த்துவேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

2021-ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதை நிறைவேற்றும் வகையில் மன்ற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.‘

நடிகர் ரஜினிகாந்த் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். வழக்கமாக விமான நிலையத்திலும், தனது வீட்டு வாசலிலும் பத்திரிகையாளர்களிடம் கருத்துக்களை தெரிவித்து வந்த ரஜினிகாந்த், இன்று முதல் முறையாக பத்திரிகையாளர்களை வரவழைத்து பேட்டியளித்தார்.

அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது:-

கடந்த முறை நான் பேட்டியளித்த போது தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறினேன். அதுகுறித்து வெளியே பரபரப்பாக பேசப்பட்டது. அது என்ன என்று தெரியாமல் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்தனர்.

1996-ல் இருந்தே என்னை அரசியலில் தொடர்பு படுத்தி வருகிறார்கள். 25 வருடங்களாக நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறி வந்துள்ளனர். ஆனால், 2017 டிசம்பர் 31-ல் தான் நான் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னேன். ஆனால் 1996-ல் இருந்து அரசியலில் மூத்த தலைவர் கருணாநிதி, மூப்பனார் மற்றும் சோ உள்ளிட்டவர்களை நான் கலந்து பேசி வருகிறேன். அவர்களுடன் பழகியிருக்கிறேன். அரசியலுக்கு நான் வருவேன் என்பது தலையெழுத்தாக இருக்கலாம்.

ஒவ்வொரு முறையும் தீவிரமாக அரசியலை கவனிக்க ஆரம்பித்தேன். 2016-ல் ஜெயலலிதா மறைந்த பிறகும், 2017-ல் கருணாநிதி மறைந்த பிறகும் அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகியது. ஸ்திரத்தன்மையின்றி இந்த ஆட்சி எப்போது விழும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போதே சிஸ்டம் சரியில்லை என்று நான் சொன்னேன். அதை சரிசெய்து ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைக்க முடியுமா? அது போல் தான் முதலில் மாற்றத்தை செய்ய வேண்டும்.

அரசியலில் திமுக, அதிமுகவைப் பார்த்தால் மிகப்பெரிய கட்சிகளாக உள்ளன. தேர்தல் என்றால் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை வருவார்கள். தேர்தல் முடிந்ததும் தேவையென்ன என்று தெரிந்து கொண்டு போய்விடுவார்கள். ஆளும் கட்சிக்கு டெண்டர், ஒப்பந்தங்கள் கிடைக்கும். இதையே தொழிலாக பலர் செய்கிறார்கள்.

இதனால் தான் கட்சிகள் கெடுகின்றன. நாம் அடுத்த அத்தியாயத்தை இப்போது பதிவு செய்ய வேண்டும். வீட்டில் திருமணம் போன்ற விழாக்கள் நடத்துகிறோம். அப்போது சமையல் கலைஞர்கள் போன்ற ஆட்கள் தேவைப்படுவார்கள். விழா முடிந்ததும் அவர்களை அனுப்பி விடுவோம். தேவையானவர்களை மட்டும் வைத்துக் கொள்வோம். அதே போல் யார் யார் நமக்கு தேவையோ அவர்களை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் எனது முதல் திட்டம்.

இரண்டாவது திட்டம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும். இப்போதைய அரசியலில் 50, 55 மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களே உள்ளனர். எம்பி, எம்எல்ஏக்களின் மகன்களுக்கே தேர்தலில் மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

எனது திட்டத்தின் படி 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் நல்ல படித்தவர்களாக, நல்ல சிந்தனை உள்ளவர்களாக, நல்ல பெயர் உள்ளவர்களாக பார்த்து அரசியலுக்கு கொண்டு வரவேண்டும். இது 60 முதல் 65 சதவீதம் வரை நடைபெற வேண்டும். எஞ்சிய 30 முதல் 40 சதவீதம் வரையிலான இடங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளவர்களை வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தில் புது ரத்தம் பாய வேண்டும். நல்ல பெயர், புகழ், நம்பிக்கை உள்ளவர்களை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும். ஆட்சிக்கு தலைமை பதவி வகிப்பவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும். கட்சிக்கு தலைமை வகிப்பவர் அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும்.

நான் முதலமைச்சர் ஆவேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. என் ரத்தத்தில் கூட அப்படிப்பட்ட எண்ணம் இல்லை. நான் ஏன் முதலமைச்சராகக் கூடாது? திராவிடக் கட்சிகளோடு இது நின்றுபோய் விட வேண்டுமா என்று சோ போன்றவர்கள் கேட்டார்கள். ஆனால், ஒரு இளைஞர் அன்பு பாசம் கொண்டவராக, தன்மானம் கொண்டவராக, பொதுநோக்கு, தொலைநோக்கு கொண்டவராக இருந்தால் அவரையே முதலமைச்சர் ஆசனத்தில் உட்கார வைப்பேன் என்று நான் கூறினேன். மக்களும் அதையே விரும்புவார்கள் என்று நான் கூறியிருக்கிறேன்.

மூன்றாவதாக ஒழுக்கம் என்பது முக்கியமான ஒன்று. என்னை ஒரு தியாகி என்று நான் ஒருபோதும் கூறியதில்லை (இதைத் தொடர்ந்து 2017 டிசம்பரில் ரசிகர் மன்ற கூட்டத்தில் அவர் பேசிய வீடியோவை போட்டுக் காட்டினார்).

ரஜினிகாந்த் கடந்த முறை பேட்டியளித்த போது, ஒரு விஷயத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் உள்ளது என்றார்.

நான் முதலமைச்சர் பதவியை ஏற்க மாட்டேன் என்று கூறியதை யாருமே ஏற்கவில்லை என்று ஏமாற்றம் குறித்து விளக்கம் அளித்தார்.

ஆனால், இரண்டாவது முறையாக இன்று மன்ற மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்திய பிறகு அரசியல் கட்சி பற்றி அறிவிப்பு எதுவும் வெளியிடாதது அவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.