மும்பை, மார்ச் 12:  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஐபிஎல் தொடரை தள்ளிவைக்க வேண்டும் என்று கருத்து பரவிவரும் சூழலில், இது குறித்து நாளை மறுநாள் ஆலோசனைக்கூட்டம் நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

13-ஆவது ஐபிஎல் டி20 தொடர் இம்மாதம் 29-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது 97 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் கூட வேண்டாமென்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால், இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படலாம், அல்லது ரத்து செய்யப்படலாம் என்று தகவல் பரவியது.

இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம், பிசிசிஐ தரப்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரை குறிப்பிட்ட தேதியிலேயே நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா? என்பது குறித்து மார்ச் 14-ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.