சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரணாக இருக்கும்

அரசியல்

சென்னை, மார்ச் 12:

சிறுபான்மை மக்களை தி.மு.க. காப்பதைவிட கோடி மடங்கு அம்மாவின் அரசு காக்கும் என்றும், இந்த அரசு மீது வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார். அது மக்களிடம் என்றைக்கும் எடுபடாது என்றும் அமைச்சர் கூறினார்.

ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளையொட்டி தி.நகர் தொகுதி வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்த வரலாற்றை உருவாக்கி காட்டினார் ஜெயலலிதா பார்த்து, பார்த்து திட்டங்களை கொண்டு வந்தார்.காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த மசோதா சட்டசபையில் கொண்டு வந்தபோது அதன் மீது பேசிய தி.மு.க., பின்னர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள். அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் இந்த சட்டத்தை வரவேற்றிருக்கிறார்கள். சமீபத்தில் திருவாரூரில் காவிரி பாசன விவசாயிகள் ஒன்று சேர்த்து எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தி ‘காவிரி காப்பாளன்’ என்ற படத்தையும் வழங்கி இருக்கிறார்கள்.ஆனால் தி.மு.க. சட்டசபையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டபோது அதனை நிறைவேற்ற மனமில்லாமல் வெளிநடப்பு செய்தார்கள்.

இவர்கள் விவசாயிகளின் விரோதிகள். எடப்பாடி பழனிசாமியின் அரசு ஒரு நாள் தான், 2 நாள் தான், 3 நாள் தான், 10 நாள் தான் என ஸ்டாலின் வாய்ப்பாடு படித்தார். ஆனால் இன்று 3 ஆண்டு நிறைவடைந்து 4–ம் ஆண்டில் அம்மாவின் ஆட்சி அடி எடுத்து வைத்திருக்கிறது. இங்கு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட திட்டம் போன்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழகம் உள்ளது.

தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. இதனை பொறுத்த கொள்ள முடியாமல் கலவரம் வராதா? நிலவரம் மாறாதா? என்று ஸ்டாலின் நினைக்கிறார். அது நடக்காது. மக்கள் எடப்பாடி பக்கம் அணிவகுத்து நிற்கிறார்கள். அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கரத்தை பலப்படுத்துவோம். இவர்கள் உங்களுக்காக உழைப்பவர்கள். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.