சென்னை, மார்ச் 12:

2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பெருபான்மையுடன் ஹாட்ரிக் வெற்றி பெறும் என பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தெரிவித்துள்ளார்.

வனத்துறை மற்றும் சுற்றுசூழல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பொன்னேரி தொகுதி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் பேசுகையில்: 2021 பொதுத்தேர்தலில் அதிமுக அதிசயத்தை, அற்புதத்தை படைக்கும், அறுதிப் பெருபான்மையுடன் அடுத்து ஆட்சியை அமைக்கும், எம்ஜிஆர் காலத்தில் 1977, 1980, 1984ல் பெற்ற ஹாட்ரிக் தொடர் வெற்றிப் போல 2011,2016,2021 என மீண்டும் ஒரு ஹாட்ரிக் வெற்றியை நாம் பெறுவோம். அந்த சரித்திர சாதனையை ஓபிஎஸ், இபிஎஸ் நிகழ்த்தி காட்டுவார்கள்.

முதல்வர் எடப்பாடியார் மக்களை சந்திக்கிறார், அவர்களோடு பயணிக்கிறார், அவர்களின் குறைகளை கேட்கிறார் அதை தீர்த்து வைக்கப் பாடுபடுகிறார். அதனால் மக்களின் ஆதரவு நம் கட்சிக்கும், ஆட்சிக்கும் நாளுக்கு நாள் பெருகிறது. சிலரது நிலைமை எப்போதும் தேய்பிறையாகவே இருந்து வருகிறது. அவர்களின் ராசி அப்படி, அதனால் தான் வடநாட்டுச் சரக்கை இறக்குமதி செய்து, கட்சிக்கு பூஸ்ட் கொடுத்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். என்ன மேஜிக் செய்தாலும், என்ன கில்லாடி வித்தைக் காட்டினாலும் அது மக்களிடம் செல்லுபடியாகாது அது அந்த கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்கே தெரியும்.

அதனால் தான் கோடிகளைக் கொட்டித் கொடுத்து அழைத்து வரும் வடநாட்டு ஆசாமிக்கு அங்கேயே கடும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறதாம். எது எப்படியோ எதிர்கட்சியினரின் கனவு ஒரு போதும் நனவாகப் போவதில்லை, முதலமைச்சர் நாற்காலிக் கனவோடு நாட்களை கடத்தி கொண்டிருக்கும் எதிர்கட்சிகளின் நிலைமை இலவு காத்த கிளி யாகத்தான் மாறப் போகிறது.

நம் எதிரிகள் எத்தனை வியூகங்களை வகுத்தாலும், அத்தனையையும் முறியடித்திடும் மக்களின் ஆதரவு எனும் மகத்தான சக்தி மிக்க ஆயுதத்தை எங்களின் நவீன அரசியல் சாணக்கியன் எடப்பாடியார் வைத்திருக்கிறார், அரசியல் வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்து கொண்டிருக்கும், எதிர்கட்சியினர் அங்கு சுற்றுசூழலுக்கு எவ்வித கேடும் விளைவிக்காமல் நல்லபடியாக நாடு திரும்பி எப்போதும் போல தங்களின் எதிர்கட்சிப் பணியினை ஆற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.