மும்பை, மார்ச் 13:  முதன்முறையாக பெடரேஷன் கோப்பை டென்னிஸின் உலகச்சுற்றுக்கு இந்தியாவை தகுதிபெற வைத்தவர் என்ற பெருமையுடன், துபாய் ஆடுகளத்தில் ஒரு கையில் தனது குழந்தை, மறு கையில் டென்னிஸ் பேட்டை தூக்கியபடி நட்சத்திர வீராங்கனை சானியா வெளியிட்டுள்ள தனது புகைப்படும் தற்போது அனைவரின் பாராட்டுகளையும் குவித்துவருகிறது.

2010-ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கரம்பிடித்தார், இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா. பாகிஸ்தானின் மருமகள் என்றாலும்கூட, டென்னிஸ் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கெடுத்துவருகிறார். 2018-ம் ஆண்டு, சானியா – மாலிக் தம்பதிக்கு குழந்தை பிறந்தது. மகப்பேறுக்குப் பின், சானியா உடல் எடை அதிகரிக்க, சானியா மீண்டும் டென்னிஸ் களத்துக்குத் திரும்புவாரா? அவரால் அதே ஆக்ரோஷத்துடன் விளையாட முடியுமா? என்பது போன்ற விமர்சனங்கள் வரிசைக்கட்டின. இருப்பினும், தனது கடும் முயற்சியால் 2 ஆண்டுகளுக்குப்பின் டென்னிஸ் களத்துக்குத் அதே ஆக்ரோஷத்துடன் திரும்பி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார், சானியா.

பின்னர், துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற சானியா- அங்கிதாவுடன் இணைந்து விளையாடி, இந்தோனேஷியா இணையை வீழ்த்தி, முதன்முறையாக ஃபெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக சுற்றுக்கு இந்தியாவை தகுதி பெறவைத்தார். இந்த வெற்றிக்குப் பின்னர், சானியா ஒரு கையில் தன் குழந்தை இஸ்ஸான், மற்றொரு கையில் டென்னிஸ் பேட்டுடன் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ‘மகன் இஸ்ஸான், தனக்குத் தூண்டுதலாக இருப்பதாகவும், ஒரு புகைப்படம் போதும் என் வாழ்க்கையைக் கூற’ என்ற கேப்ஷனுடன் சானியா பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு, ‘சக்திவாய்ந்த புகைப்படம்’ என்பது உள்ளிட்ட ரிப்ளையுடன் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.