புதுடெல்லி, மார்ச் 13:  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அடியெடுத்து வைத்துள்ளது. இதன்காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸை, மிகப்பெரிய தொற்று என அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த மகாராஷ்டிரா, கர்நாடக அரசுகள் மறுப்பு தெரிவித்துள்ளன. தொடக்க போட்டியான மும்பை-சென்னை அணிகள் இடையே மும்பையில் நடைபெறவிருந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கும் மஹாராஷ்டிரா அரசு தடை விதித்துள்ளது. இதனிடையே, மத்திய சுகாதாரத்துறை சார்பில் இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு (பிசிசிஐ) கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், விளையாட்டு போட்டிகளின் போது ரசிகர்கள் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை தவிர்க்க முடியவில்லை என்றால் பார்வையாளர்களை அனுமதிக்காமல் போட்டியை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், ஐ.பி.எல்., நடத்துவதா? வேண்டாமா? என்றால், அந்த நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். எங்களைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என்று தான் சொல்கிறோம். ஆனால் போட்டியை நடத்த விரும்பினால் அது அவர்கள் முடிவு என தெரிவித்துள்ளது. இதனால், ஐபிஎல் போட்டி நடத்துவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும், நாளை நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரின் நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின்னரே தொடரை ரத்து செய்வதா? அல்லது தள்ளிவைப்பதா? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.