திண்டுக்கல், மார்ச்14:

நோய்களை தடுப்பதில் தமிழகம் நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ வசதி வழங்கப்படுகிறது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக 2000 மருத்துவர்களை உருவாக்கி சாதனை படைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
திண்டுக்கல் புதிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திண்டுக்கல் அருகே உள்ள ஒடுக்கம் என்ற இடத்தில் இன்று நடைபெற்றது.

விழாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார்.
விழாவில் அவர் பேசியதாவது:-

அதிமுக வரலாற்றில் திண்டுக்கல்லுக்கு சிறப்பு இடம் உண்டு. எனது தலைமையிலான அரசு இந்த மாவட்ட வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

மாநில மக்கள் அனைவரும் எந்த நோயுமின்றி சுகாதாரத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக மருத்துவக் கல்லூரிகளையும், மருத்துவமனைகளையும் அமைத்து வருகிறோம். மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து ஒரே உத்தரவில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான அனுமதியை பெற்றது ஒரு வரலாற்று சாதனையாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக 2000 மருத்துவர்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறோம்.

இன்று இந்த கல்லூரி அமைப்பதற்கு ரூ.100 கோடியை ஒதுக்கியிருக்கிறோம். வருவாயில் நான்கில் ஒரு பங்கை கல்விக்காக ஒதுக்கிறோம். மாநில மக்கள் அனைவரும் தொற்று மற்றும் தொற்று இல்லாத நோய்களின்றி வாழ வேண்டும் என்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறோம். நோய்க தடுப்பதில் தமிழகம் நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கியதற்காக ஐந்து முறை தேசிய விருது பெற்றிருக்கிறோம்.

இந்த மாவட்டம் தொழில்வளர்ச்சி மிக்கதாக திகழ்கிறது. 3500 சிறு, குறு தொழில்களும், 50 தொழிற்சாலைகளும் இந்த மாவட்டத்தில் உள்ளன. இந்த தொழிலை மேலும் மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். ஏழைகளின் நலனை காக்கும் அரசாக இந்த அரசு செயல்படுகிறது.

பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் குறைகள் தெரியாது. ஆனால் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றன. இம்மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி சிறப்புமிக்க இடமாகும். இங்குள்ள தண்டாயுதபாணி திருக்கோவிலை திருப்பதி கோயிலுக்கு இணையாக மேம்படுத்தி பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்வதற்காக ரூ.55 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை ரூ.2847 கோடியை உதவியாக வழங்கியிருக்கிறோம். ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை செய்கிறது.
இன்று 25,800 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் திட்டத்தையும் நான் துவக்கிவைக்கிறேன். ரூ.108 கோடி மதிப்பில் கீரனூர் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் தொடங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.