நாமக்கல், மார்ச் 14:

நாமக்கல் அருகே காரும் செங்கல் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

நாமக்கல் மாவட்டம் செல்லப்பா காலனி பகுதியில் வசித்து வரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் சதீஷ்குமார், தர்மன், பப்லு, ரோஷன் குமார், சசிகுமார், ராஜேந்திரன் ஆகிய 6 பேரும் ஒரு சுமோ காரில் திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் கோயிலுக்கு டைல்ஸ் ஒட்டும் பணிக்குச் சென்றனர்.

இரவு பணி முடிந்து திரும்பிய போது திருச்சி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சின்னவேப்பநத்தம் பகுதியில் கார் வந்தபோது, சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் இருந்து திருச்சி நோக்கி செங்கட்ல ஏற்றிக்கொண்டு சென்ற லாரியுடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கட்டடத் தொழிலாளர்கள் ஆறு பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த நாமக்கல் போலீசார், பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலங்களை மீட்டு நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த விபத்து குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதில் தலைமறைவான லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.