புதுடெல்லி, மார்ச் 14:

பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு லிட்டருக்கு ரூ.3 சிறப்பு உற்பத்தி வரி விதித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் பயனை மத்திய அரசுக்கு கிடைக்கும் வகையில் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு சில்லரை விலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் ரூ.72.57 காசாகவும், டீசல் ரூ.66.2 காசாகவும் விற்பனையானது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறிய அளவிலேயே இந்த மாற்றம் இருந்தது. சர்வதேச சந்தை நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலையை பெருமளவு குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்து உள்ளது. இந்த வரிவிதிப்பின் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.39 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும், சர்வதேச விலை வீழ்ச்சியை நுகர்வோருக்கு சென்றடைவதை தடுக்கும் வகையில் இந்த வரி விதிப்பு அமைந்திருப்பதாகவும், இதனால் உள்நாட்டு விலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் எண்ணெய் நிறுவன வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்பு குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் பெட்ரோல் மீதான சுங்க வரி ரூ.2-ல் இருந்து ரூ.8 ஆகவும், டீசல் மீதான கலால் வரி யரூ.2-லிருந்து ரூ.4 ஆகாவும் உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பெட்ரோல், டீசல் மீதான சாலை கூடுதல் வரி லிட்டருக்கு ரூ.1 வீதமும் உயர்த்தப்படுகிறது. இதன்படி மொத்தத்தில் லிட்டருக்கு ரூ.3 வீதம் கூடுதலாக வரி விதிக்கப்படுகிறது.

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி கொரோனா வைரஸ் பீதியை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டு வருவதால் உள்நாட்டில் விலை குறையும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்தனர். ஆனால் இதற்கு மாறாக மத்திய அரசு சிறப்பு வரியை விதித்து விலையை குறைக்க விடாமல் தடுத்திருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.