சென்னை, மார்ச் 16: பயணிகள் வரத்து குறைவாக இருந்ததால் இன்று சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பார்வையிட்டனர்.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக மத்திய அரசு ஏப்ரல் 15 வரை விசாக்கள் வழங்குவதற்கு தடை விதித்துள்ளது. இதனிடையே சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து விட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இன்று காலை ஆஸ்திரேலியா மற்றும் லண்டனுக்கு மட்டும் இரண்டு விமானங்கள் குறைந்த பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றன.

பயணிகள் வராததால் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பன்னாட்டு விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல் உள்நாட்டு விமானநிலையத்திலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அத்துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.

பயணிகளுக்கு செய்யப்படும் சோதனை, வணிக வளாகங்களை தூய்மையாக வைத்திருக்கிறார்களா என்பதை நேரில் பார்த்தனர்.