சென்னை, மார்ச் 16: தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லையோரம் உள்ள 16 மாவட்டங்களில் சுமார் 300 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. ஷாப்பிங் மால்களையும் இன்று முதல் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விடுத்த அறிக்கையில் எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் சினிமா தியேட்டர்களையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் 31.3.20 வரை உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் 17, திருப்பத்தூர் மாவட்டத்தில் 23, ராணிப்பேட்டையில் 11 என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் 51 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. பிற மாவட்டங்களில் அரசின் உத்தரவை செயல்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர்கள் தியேட்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
இதன்படி 16 மாவட்டங்களிலும், பிற மாநில எல்லையை ஒட்டியுள்ள 300 சினிமா தியேட்டர்கள் இன்று முதல் காட்சிகள் நடைபெறவில்லை. இதே போல் மக்கள் பெருமளவில் வரும் வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவையில் ஷாப்பிங் மால் நிறுவன அதிபர் ஒருவர் கூறுகையில், அரசின் உத்தரவை ஏற்று நாங்கள் செயல்படுவோம்.
அரசாணை நகல் எங்களுக்கு வந்துவிட்டது. கலெக்டரிடம் இருந்து இறுதி தகவலை எதிர்பார்த்திருக்கிறோம்.
ஷாப்பிங் மால்களில் ஏற்கனவே அரசின் அறிவுரையை ஏற்று தினமும் பலமுறை தரையை திரவத்தால் சுத்தப்படுத்தி வருகிறோம் என்றார்.