சென்னை, மார்ச் 16: சிஏஏ சட்ட திருத்தத்தை எதிர்த்து கடந்த ஒரு மாதமாக வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் முஸ்லீம் அமைப்புகள் நடத்தி வந்த போராட்டம் இன்று ஒத்திவைக்கப் படுவதாக சில இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அறிவித்தனர். ஆனால் வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தி வரும் அமைப்பினர் இதை மறுத்துள்ளனர்.

சிஏஏ சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக் கோரியும், என்பிஆர் கணக்கெடுப்புக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் வண்ணாரப்பேட்டையில் உள்ள கண்ணன் ரவுண்டானாவில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் இடைவிடாமல் போராட்டம் நடத்தி வந்தன.
இதை வாபஸ் பெறுவது தொடர்பாக தலைமைச்செயலாளர் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோருடன் முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகள் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் போராட்டத்தை நிறுத்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனிடையே வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தி வரும் அமைப்பினர் கூறுகையில் தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் சில தலைவர்கள் வெளியிட்ட அறிவிப்பு குறித்து எங்களுக்கு தெரியாது. எங்கள் அமைப்புக்கும் அவர்களுக்கு தொடர்பு இல்லை என்றனர்.