சென்னை, மார்ச் 16: ராஜ்யசபா தேர்தலில் அதிமுக மற்றும் திமுக சார்பில் போட்டியிட்ட ஆறு பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இதுபற்றிய அறிவிப்பு நாளை மறுதினம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
எனவே அந்த இடங்களை பூர்த்தி செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டது. அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் மற்றும் திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவை தவிர சுயேட்சையாக பத்மராஜன், அக்னிராமச்சந்திரன், அகில இந்திய யாதவ சேனா தலைவர் இளங்கோ யாதவ் உட்பட மொத்தம் 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளர் அறையில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் முன்னிலையில், பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அலுவலரான சீனிவாசன், வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார்.
அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் மற்றும் திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, ஆகியோரின் மனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு அதிமுக சார்பில் 3 பேரும் திமுக சார்பில் 3 பேரும் ஆக மொத்தம் 6 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். ஆகவே அவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
வேட்பு மனுக்களை விலக்கிக் கொள்வதற்கு கடைசி நாளான 18-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.
அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் மற்றும் திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு அன்றைய தினம் வெளியாகும்.