சென்னை, மார்ச் 16: கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டுமென டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்நிலையில் மக்கள், தங்கள் கைகளை கழுவுவதற்கு தேவையான தண்ணீரை வினியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தினமும் 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் சென்னை பெருநகர குடிநீர் வாரியம் 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே சப்ளை செய்து வருகிறது. அதனால், கொரோனா பாதிப்பு நீங்கும் வரை தினமும் 3 மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்ய குடிநீர் வாரியத்திற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போதுமான தண்ணீர் வழங்கப்படுவதில்லை. கைகளை சுத்தப்படுத்த தேவையான ஹேண்ட் வாஷ் போன்ற திரவங்கள் வழங்கப்படவில்லை.
பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிக்க செய்வதுடன், கைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தும் திரவங்களையும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இதேபோல, சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குவதால், கொரோனோ வைரஸ் பரவ 90 சதவீதம் வாய்ப்புள்ளது. எனவே, சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் எனக் கோரி கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், கொரோனா வைரஸ் பாதித்து பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கூறியுள்ளார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட பெஞ்சானது, இதுகுறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.