சென்னை, மார்ச் 16: திமுக பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் அவர் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறினார். 29-ம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
திமுகவில் 1977 முதல் 43 ஆண்டு காலம் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவியை வகித்து வந்த அன்பழகன் கடந்த 7-ம் தேதி 98-வது வயதில் மரணம் அடைந்தார். இதையடுத்து பொதுச்செயலாளர் பொறுப்புகளை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக வகித்து வருகிறார்.

அன்பழகன் மறைவையொட்டி ஒருவாரம் அனுசரிக்கப்பட்ட துக்கம் கடந்த சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. அன்று மாலை கலைஞர் அரங்கத்தில் திமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற அன்பழகன் திருவுருவ பட திறப்பும், நினைவஞ்சலி கூட்டமும் நடைபெற்றது.
இதையடுத்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக பொதுக்குழு கூட்டம் 29.3.2020 ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில் கலைஞர் அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்புஅழைப்பாளர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதனிடையே பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் இன்று காலை ராஜினாமா செய்தார். அறிவாலாயத்துக்கு வந்த அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கடிதத்தை கொடுத்தார். ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக கூறிய மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறினார்.

பொருளாளர் பதவி காலியாக இருப்பதால் அந்த பதவிக்கு மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரது பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.
கடந்த ஜனவரி மாதம் முதன்மை செயலாளர் பதவியை வகித்து வந்த டி.ஆர்.பாலு அந்த பதவியை கே.என்.நேருவிற்கு விட்டுக்கொடுத்தார். இந்த நிலையில் 29-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் பொருளாளர் பதவிக்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.