சென்னை, மார்ச் 17: கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள் அதிக மக்கள் கூடும் வணிக வளாகங்களுடன் கூடிய தியேட்டர்கள் ஆகியவை வரும் 31-ம் தேதி வரை மூடப்படுகின்றன. மேலும் சினிமா படப்பிடிப்புகள் வரும் 19-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் வரும் 19-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் சின்னத்திரை படப்பிடிப்புகளும் 19-ம் தேதி முதல் நிறுத்தப்படுகின்றன. ஏற்கனவே படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள இடங்களில் 19-ம் தேதிக்குள் நடத்தி முடித்து விட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல் சினிமா போஸ்ட் புரோடக்ஷன் பணிகளான டப்பிங், எடிட்டிங், பின்னணி இசை, கிராபிக் காட்சிகள் அமைப்பு, போன்ற பணிகளும் உடனடியாக நிறுத்தப்படுகின்றன. இந்த பணிகளில் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது.