சென்னை, மார்ச் 17: சென்னை தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அதிர்வு காரணமாக மணல் சரிந்து அடுத்தடுத்து 3 கடைகள் பூமிக்குள் உள்வாங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த வழிதடத்தில் பாதி உயர்மட்ட பாலமாகவும், தண்டையார் பேட்டையில் சுரங்க மார்க்கமாகவும் மெட்ரோ ரெயில் வழிதடங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில், தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை சிடிஎச் சந்திப்பின் அருகே அமைந்துள்ள அடுத்தடுத்த 3 கடைகள் இன்று காலை 6.55 மணியளவில் திடீரென உள்வாங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தியதில், குகன் மருந்தகம், திருவொற்றியூர் சின்னமேட்டு பாளையத்தை சேர்ந்த சுனில் குமார் (வயது 36) என்பவரின் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ & ஸ்னாக்ஸ் கடை, அதன் அருகே அமைந்திருந்த குகன் மருந்தகம் மற்றும் அடுத்து அமைந்திருந்த காலியான கடை என மூன்று கடைகள் இடிந்துள்ளது தெரியவந்தது.

அப்பகுதியில் நடைபெற்றுவரும் மெட்ரோ ரெயில் சுரங்கப் பணியின் காரணமாக, இன்று காலை ராட்சத கிரேன் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றுவந்ததாகவும், இதன்காரணமாக, அதிர்வு ஏற்பட்டு மணல் சரிந்து கட்டிடம் உள்வாங்கி இடிந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகளோ, காயமோ ஏதும் ஏற்படவில்லை என்றும், அதேசமயம், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் கட்டிடத்தின் உரிமையாளர் தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லோகநாதன் என்பவர் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரெயில் பணி காரணமாக கட்டிடங்கள் உள்வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.