புதுடெல்லி, மார்ச் 17: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.
உலகளவில் இந்த கொடிய நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 7174 ஆக அதிகரித்து உள்ளது.
ஏற்கனவே கொரோனா வைரசுக்கு இந்தியாவில் இரண்டு பேர் பலியாகி இருந்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவரும், டெல்லியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டியும் உயிரிழந்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் 64 வயது முதியவர் ஒருவரும் பலியாகி உள்ளார். மும்பை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்து உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 131 ஆக அதிகரிக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 27 பேருக்கும், அரியானாவில் 14 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 13 பேருக்கும், தெலுங்கானாவில் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.
மராட்டியம், கேரளா, அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, காஷ்மீர், லடாக், தமிழ்நாடு, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 15 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7174 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை சீனாவில் 3,226 பேர், இத்தாலியில் 2,158 பேர், ஈரானில் 853, ஸ்பெயினில் 342 பேர் பலியாகி உள்ளனர்.

கையில் முத்திரை:
இதனிடையே மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக உத்தவ் தாக்கரே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தனிமை சிகிச்சையில் இருந்து சிலர் தப்புவதை தடுப்பதற்கு இடது கையில் அழியா மை முத்திரையிடுவது என முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோட்லே கூறுகையில், தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப்படும் அழியா மையின் மூலம் இடது கையில் வைக்கப்படும் இந்த மை அடுத்த 14 நாட்களுக்கு அழியாது. இதன் மூலம் சிகிச்சையை பெறுவதில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றார்.