சென்னை, மார்ச் 17: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 29-ல் நடக்க இருந்த திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்காக வரும் 29-ம் தேதி கூடுவதாக இருந்த திமுக பொதுக்குழு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

கடந்த 15-ம் தேதி அறிக்கையின் வாயிலாக திமுக பொதுக்குழு கூட்டத்தில், வரும் 29-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

16-ம் தேதி கடிதத்தின் வாயிலாக கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விழைவதாகவும் எனவே அவர் தமது பொறுப்பில் இருந்து விலகுவதாக என்னிடம் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு 29-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு அடிப்படையில், ஏற்கனவே 29-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கட்சி பொதுக்குழு ஒத்தி வைக்கப்படுவதோடு, தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற மார்ச் 31-ம் தேதி வரை ஒத்தி வைத்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்