பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா

சினிமா

தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டப்படி குற்றம்’ படத்தில் அறிமுகமானவர் கோமல் சர்மா. அதன்பிறகு நாகராஜசோழன் எம்எல்ஏ, வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது தமிழகம் தாண்டி மலையாளம், இந்தி என தனது எல்லைகளை விரிவாக்கியுள்ளார்.

இவர் மலையாளத்தில் உருவாகி வரும் ‘மரைக்கார் ; அரபிக்கலிண்டே சிம்ஹம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள இந்தப் படம் குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தலைவனை பற்றிய படமாக உருவாகியுள்ளது. வரும் மார்ச் மாதம் இந்தப்படம் வெளியாக உள்ளது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கோமல் சர்மா கூறும்போது, ‘இந்த படத்திற்காக ஆடிசன் வைத்துதான் என்னை தேர்வு செய்தார் இயக்குநர் பிரியதர்ஷன். பொதுவாகவே மோகன்லால் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரின் படங்களில் ஒருமுறையாவது நடித்து விடவேண்டும் என்பது எல்லோருக்குமே ஒரு கனவாக இருக்கும். அந்த கனவு எனக்கு நிறைவேறியுள்ளது.

மற்றொரு பக்கம் மரைக்கார் படம் முடிவடைந்ததும் இயக்குநர் பிரியதர்ஷன் இந்தியில் ‘ஹங்கமா-2’ படத்தை தொடங்கினார் இந்த படத்தின் மூலம் இந்தியில் நுழையும் வாய்ப்பையும் எனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இந்தபடத்தில் ஷில்பா ஷெட்டி, பரேஷ் ராவல் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. மேலும் தற்போது தமிழில் சில படங்களில் நடித்து வருகிறேன் என்றார்.