டோக்கியோ, மார்ச் 17:  ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி வரும் ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி நடப்பாண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீனாவில் தொடங்கி, தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்சின் தாக்கம் காரணமாக, சர்வதேச விளையாட்டு போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகள் அனைத்தையும் அந்தந்த நாடுகள் ரத்து செய்யதுள்ளன மற்றும் தள்ளிவைத்துள்ளன. ஆசிய நாடுகளில் அதிகமாகக் காணப்படுவதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது.

இது குறித்து, ஒலிம்பிக் குழுவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான டிக் பவுண்ட், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது குறித்த இறுதி முடிவு மே மாதத்தில் எடுக்கப்படும் என்றும், சூழ்நிலைகளைப் பொருத்து ஒலிம்பிக் போட்டிகளை தள்ளி வைக்கவோ, இடத்தை மாற்றவோ திட்டங்கள் உள்ளதாகவும் கூறி இருந்தார்.

ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் போச், கொரோனா வைரஸால் எந்தவித அச்சமும் இல்லை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதுதான் தங்கள் நோக்கம் என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். சில நாட்கள் முன்பு, ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசிய ஜப்பான் ஒலிம்பிக் விளையாட்டு அமைச்சர் செய்கோ ஹசிமோடோ, ஒலிம்பிக் கமிட்டியுடனான ஜப்பான் அரசின் ஒப்பந்தத்தில், 2020க்குள் போட்டியை நடத்த வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. குறித்த நேரத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஜப்பான் அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறியிந்தார்.

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டி குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்சினால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் கூட, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி வரும் ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று திட்டவட்டமாக அவர் கூறியுள்ளார்.