சென்னை, மார்ச் 18: நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு பேசுகையில், கடந்த 4 ஆண்டுகளாக நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை சம்பந்தமாக பேரவையில் கேள்வி இடம்பெறவில்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும், பொதுமக்களின் நலனில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு துறைகள் சார்பாக பேரவையில் கேள்விகள் இடம் பெறாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: உறுப்பினர்கள் இந்த இரண்டு துறைகள் சார்ந்து எப்போது கேள்வி எழுப்பினாலும் அதற்கான தகுந்த பதிலை அளித்து கொண்டிருக்கிறேன்.
தங்கம் தென்னரசு : அரசு தரப்பில் போடப்படும் ஒப்பந்தங்கள் குறிப்பிட்டவர்களுக்கே தொடர்ந்து ஒதுக்கப்படுவது ஏன்?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: இ- டெண்டர் வந்த பிறகு யார் விண்ணப்பிக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது எனவே வெளிப்படையாகத் தான் டெண்டர் விடப்படுகிறது. திமுக ஆட்சி காலத்தில் விடப்பட்டது போன்று சிங்கிள் டெண்டர் விடுவதில்லை. மேலும் டெண்டர் எடுக்கும் நிறுவனங்களின் பணியில் எந்த புகாரும் வராமல் தரமாக பணிகளை செய்து வருகின்றனர். எனவே வெளிப்படையாகத் தான் டெண்டர் விடப்படுகிறது.

தங்கம் தென்னரசு : சுங்கச்சாவடிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது. குறைந்த இடைவெளியில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. மதுரையில் மட்டும் குறைந்த இடைவெளியில் மூன்று இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மதுரை மாநகர் மக்கள் கோரிக்கையை ஏற்று அங்கு இரண்டு வழி சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டது. அதற்கான செலவு அதிக அளவில் இருப்பதால் அங்கு குறைந்த இடைவெளியில் மூன்று இடங்களில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து குடிமரமாத்து திட்டம் குறித்து தங்கம் தென்னரசு தனது சந்தேகத்தை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள 14 ஆயிரம் ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் படிப்படியாக தூர்வாரப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் 2016 – 17-ம் ஆண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 1,513 ஏரிகள் தூர்வாரப்பட்டதாகவும் 2017-18-ம் ஆண்டில் 331 கோடி ரூபாய் மதிப்பில் 1523 பணிகள் நடைபெற்றதாகவும் 2019-20-ம் ஆண்டில் 499 கோடி ரூபாய் மதிப்பில் 1829 ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டன . அதே போல 2020-21-ம் ஆண்டில் 499 கோடி ரூபாய் செலவில் 1364 பணிகள் நடைபெற்றுவருவகிறது. மொத்தமாக மூன்று ஆண்டுகளில் 930 கோடி ரூபாய் மதிப்பில் 4,865 பணிகள் விவசாயிகளின் ஒத்துழைப்போடு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.