புதுடெல்லி, மார்ச் 18: கோலாலம்பூரில் தவித்து வரும் 80 தமிழர்கள் உட்பட 200 இந்தியர்களை அழைத்து வருவதற்காக இன்று மதியம் 2 விமானங்கள் விரைகின்றன. இன்று மாலை அல்லது இரவில் அவர்கள் டெல்லி வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள், இங்கிலாந்து, துருக்கி, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தியர்கள் உள்பட யாரும் இந்தியாவுக்குள் வரக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் கணிசமான அளவுக்கு இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். பிலிப்பைன்சில் கல்லூரிகள் மூடப்பட்டதால் 200 இந்திய மாணவர்கள் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டனர். அந்த விமானம் கோலாலம்பூர் வந்த போது இந்தியாவில் தடை விதித்துள்ள தகவல் தெரிய வந்தது.

இதனால் அந்த 200 மாணவர்களும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்களில் 70 பேர் மாணவிகள். இந்தியா திரும்ப விமானம் இல்லாததால் அவர்கள் தவித்தப்படி உள்ளனர்.

அந்த 200 மாணவ- மாணவிகளில் 80 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் தங்களை இந்தியா மீட்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து அவரது ஏற்பாட்டின் படி டெல்லி, விசாகப்பட்டினத்தில் இருந்து 2 விமானங்கள் இன்று மதியம் 2.30 மணிக்கு கோலாலம்பூர் விரைகிறது.