‘தாராள பிரபு’ மறுவெளியீடு : ஹரிஷ் கல்யாண்

சென்னை

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘தாராள பிரபு’ திரைப்படம் கடந்த 13-ம் தேதி வெளியானது. வெளியான மூன்று நாட்களிலேயே தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இன்று உலகையே கொரோனா வைரஸ் பாதிப்பு ஸ்தம்பித்துப் போக செய்திருக்கிறது. தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் நம் நாடு, உலக அளவில் அரசாங்க அமைப்புகள் எடுத்து வரும் முயற்சிகள் பெரிதும் பாராட்டுதலுக்குரியது. கடந்த வாரத்தில் வெளியாகி, உங்களது பேராதரவைப் பெற்ற எங்கள் ‘தாராள பிரபு’ திரைப்படத்தின் திரையிடல் அரசாணைகளுக்கு இணங்க, மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்திவைக்கப் படுகிறது.

எங்களது ‘தாராள பிரபு’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்து வந்த போற்றுதலுக்குரிய அன்பிற்கும் ஆதரவுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த இக்கட்டான சூழலை கடந்தபின், அதன் மறுவெளியீட்டின் போதும், உங்களது மேலான ஆதரவை எதிர்நோக்குகிறோம்.
இவ்வாறு நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார்.