சென்னை, மார்ச் 18: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நகரில் உள்ள 669 பூங்காக்களையும் பெருநகர மாநகராட்சி மூட உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 15 மண்டலங்களிலும் உள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய பூங்காக்கள் இன்று காலை முதல் மூடப்பட்டு கிடக்கின்றன.

இதுகுறித்து பெருநகர மாநகராட்சி அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ஆணையர் ஜி.பிரகாஷ் கூறுகையில், நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் பூங்காக்களில் கூடுவார்கள். இதை தவிர்க்கும் வகையில் பூங்காக்களை மூட முடிவெடுத்தோம் என்றார்.

ஆனாலும் மெரினா கடற்கரை திறந்திருக்கும் என்றும் அங்கு வருவோருக்கு கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சென்னையில் நேற்று எக்ஸ்பிரஸ் அவென்யூ, மயிலாப்பூர் சிட்டி சென்டர், ஸ்பென்சர் பிளாசா, விஆர் மால், விஜயா போரம், பீனிக்ஸ் மால் போன்ற பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டன.
பொதுமக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்களையும் மூட உத்தரவிடப்பட்டன. புரசைவாக்கத்தில் நேற்று தனியார் வணிக வளாகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தி.நகர் ரங்கநாதன் தெருவில் இன்று பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. எப்போதும் கூட்டமாக காணப்படும் ரங்கநாதன் தெருவில் இன்று கூட்டம் குறைந்தது.

மாநகராட்சி மண்டல அதிகாரிகள் ஒவ்வொரு இடத்தையும் பார்வையிட்டு, மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் உள்ள 3,800 ஏடிஎம் மையங்களை ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தை திறந்திருக்கும் என்ற போதிலும், அங்கு வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத வழிபாட்டுத் தலங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தூய்மை நடவடிக்கையை அவ்வப்போது எடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தி இருப்பதாக அதிகாரிகள் கூறினர். பொதுமக்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.